 விசாரணைகள் ஏதுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமல் போகடிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்டுத் தரும்படி வேண்டியும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10.00 மணியளவில் மணிக்கு வவுனியா குருமண்காடு காளி கோவிலில் 1008 தேங்காய் உடைத்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த நிகழ்வினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராசா போன்றோரும் இப்பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும், காணாமல் போகடிக்கப்பட்டோரை மீட்டுத்தர வேண்டும் என்ற கருப்பொருளில் உரையாற்றியிருந்தனர்.
இந்தப் பிரார்த்தனையில் காணாமல் போனோர், அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது உறவுகள் தொடர்பில் மனம் விட்டு அழுது புலம்பினர்.
சிறைகளில் வாடுகின்ற தமது பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடைபெற வேண்டும் எனவும், காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தரவேண்டுமென்றும் வேண்டி ஆலய முன்றலில் 1008 தேங்காய்களை உடைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.






|