|
|
| சிறிலங்கா இராணுவம் 1980களில் சந்தித்த சவாலை மீண்டும் எதிர்கொள்ள தயாரில்லை – மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க |
| [ புதன்கிழமை, 11 யூலை 2012, 01:26 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] |
இராணுவ முகாம்களை நிறுவுவதற்காக பொதுமக்களின் நிலங்களை கைப்பற்றும் திட்டங்கள் ஏதும் கிடையாது என்று சிறிலங்காப் படைகளின் யாழ். தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, பிரித்தானியத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரன்கின் இரண்டு நாள் பயணமாக நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
பிரித்தானியத் தூதரக அரசியல் விவகார அதிகாரி் அஸ்மா எட்றிசுடன் அவர், பலாலி படைத் தலைமையகத்தில் யாழ்.படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவை சந்தித்துப் பேசினார்.
இதன்போது மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, “போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்காப் படையினர் வசம் இருந்த வீடுகள் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்புக் கருதி பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவாக்குவதற்கு குறிப்பிட்டளவு பிரதேசம் கையகப்படுத்தப்படவுள்ளது.
அவற்றை விரிவாக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
மறைமுக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், நில அபகரிப்பு என்று ஊடகங்கள் பெரிதுபடுத்தி வருகின்றன. அத்தகைய குற்றச்சாட்டுகள் பொய்யானவை.
சிறிலங்காவின் ஏனைய பகுதிகளைப் போலவே – தேசிய பாதுகாப்புக்கு அவசியமான எண்ணிக்கையான சிறிலங்காப் படையினர் மட்டுமே யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருப்பர்.
பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, படைக்குறைப்பு தொடர்ந்து இடம்பெறும்.
ஆனால் சிறிலங்கா இராணுவம் 1980களின் தொடக்கத்தில் எதிர்கொண்டதைப் போன்ற பாதுகாப்புச் சவாலை மீண்டும் சந்திக்கத் தயாராக இல்லை.“ என்று கூறியுள்ளார். |
|
|