|
|
| தெற்காசியாவில் சீனாவின் செயற்பாடுகள் அதிகரிப்பு – தூதுவர்களுடன் சிவ்சங்கர் மேனன் அவசர சந்திப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 12:43 GMT ] [ கார்வண்ணன் ] |
தெற்காசியாவில் சீனாவின் பொருளாதார மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் வெளிப்படையாக அதிகரித்து வருவதால் குழப்பமடைந்துள்ள இந்தியா, அதனை முறியடிப்பது குறித்துக் கலந்துரையாடுவதற்கு அயல் நாடுகளில் உள்ள தனது தூதுவர்களை புதுடெல்லிக்கு அழைத்துள்ளது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், பிராந்தியத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் பங்கை அதிகரிப்பது குறித்தும் ஆராய, அயல்நாடுகளில் உள்ள தூதுவர்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று சந்திக்கவுள்ளார்.
இந்தச் சந்திப்பு நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை முக்கியத்துவப்படுத்தியதாக இடம்பெறவுள்ளது.
அயல்நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு உதவும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சு அபிவிருத்திக்கான கூட்டு முகவரகம் ஒன்றை புதிதாக உருவாக்கியுள்ள சூழலில் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.
இது அமெரிக்காவின் யுஎஸ்எய்ட் மற்றும் பிரித்தானியாவின் டிபிட் போன்ற உதவி முகவர் அமைப்புகளை ஒத்ததாகும்.
சீனாவின் பொருளாதாரத் தலையீடுகள் தெற்காசியாவில் அதிகரிப்பது குறித்தும், அயல்நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பது குறித்துமே சிவ்சங்கர் மேனன் கலந்துரையாடுகிறார்.
நேபாளத்தில் 36 திட்டங்களுக்கும், சிறிலங்காவில் 12 திட்டங்களுக்கும், பாகிஸ்தானில் 20 திட்டங்களுக்கும், ஆப்கானிஸ்தானில் 7 திட்டங்களுக்கும், பங்களாதேசில் 9 திட்டங்களுக்கும், மாலைதீவில் 8 திட்டங்களுக்கும் சீனா உதவி வருகிறது.
இந்தநிலையில், உரியநேரத்தில் நிறைவு செய்வதை உறுதி செய்வதற்காக இந்தியாவின் எல்லா இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும், மேனன் மீளாய்வு செய்யவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு திட்டங்கள் வேகமாக முன்னெடுக்கப்படாமை இந்தியாவின் இராஜதந்திரத்துக்கு பாதகமாக அமைவதுடன், இதன்விளைவாக தெற்காசியாவுக்குள் சீனா உள்நுழைய முடிந்துள்ளது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
நேபாளத்துக்கான தூதுவர் ஜெயந்த் பிரசாத், பூட்டானுக்கான தூதுவர் பவன் வர்மா, பங்களாதேசுக்கான தூதுவர் பங்கஜ் சரண் ஆகியோரை இன்று சிவ்சங்கர் மேனன் சந்திக்கிறார்.
இதன்போது அபிவிருத்தி மற்றும் பொருளாதார உறவுகளை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து கலந்துரையாடப்படும்.
இந்தக் கலந்துரையாடலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அபிவிருத்திக்கான கூட்டு முகவரகத்தின் தலைவரான மேலதிக செயலர் பி.எஸ்.ராகவன், மற்றும் இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். |
|
|