|
|
| கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தனித்து போட்டி - சிறிலங்கா இடதுசாரிக் கட்சிகள் தெரிவிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 07:44 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] |
அதிகாரப் பகிர்வு மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என சிறிலங்காவின் இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. நடைபெறவுள்ள கிழக்கு மாகாணத் தேர்தல்களில் ஆளும் கூட்டணியிலிருந்து பிரிந்து தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் இக்கட்சிகள் அறிவித்துள்ளன.
தற்போது சிறிலங்காவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடது சாரிக் கட்சிகள், தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக கம்யூனிசக் கட்சியின் செயலாளர் ராஜ கொளுர் தெரிவித்துள்ளார்.
கம்யூனிசக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணிக் கட்சி மற்றும் லங்கா சம சமாஜாக் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆளும் இடதுசாரிக் கட்சிகளே தற்போது இந்த அறிவித்தலை மேற்கொண்டுள்ளன.
"அதிகாரப் பகிர்வின் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் போன்றவற்றை முதன்மைப்படுத்தி நாங்கள் வரும் தேர்தல்களில் போட்டியிடவுள்ளோம். அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செப்ரெம்பர் மாதத்தின் முதல் பகுதியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இவ் இடதுசாரிக் கட்சிகள் 'சோசலிச மக்கள் அமைப்பு' என்ற பெயரில் போட்டியிடவுள்ளதாகவும் கொளுர் மேலும் அறிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது, தமிழ் மக்களுக்கான பிறிதொரு தனியான அமைப்பொன்று உருவாவதை தடுப்பதை தனது பரிந்துரையில் உள்ளடக்கியுள்ளது.
இருப்பினும், வடமத்திய மற்றும் தென்கிழக்கு சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியுடன் இணைந்தே இடதுசாரிக் கட்சிகள் போட்டியிடவுள்ளதாகவும் கொளுர் குறிப்பிட்டுள்ளார். |
|
|